திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடு, கோழிகளுடன் இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆய்வு செய்த ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, ஏற்கனவே சமைத்த அசைவ உணவுகளை எடுத்து சென்ற சாப்பிட்டார். இதன் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:-
முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது. முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரது பெயராவது, முருகன் சார்ந்த பெயர்களாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்தவர் முருகப் பெருமான் தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. வரவாறு சிறப்புமிக்க மலையில் தர்கா ஒன்று இடைகாலத்தில் வந்துள்ளது. இதை காரணம்காட்டி இந்த மலையே, தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வந்தது இப்போது தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தச் சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு விருந்து நடத்தப் போவதாக இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் அறிவித்து தமிழகத்தில் மத மோதலை உண்டாக்க திட்டமிட்டனர். காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி கனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத மோதவை உண்டாக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கமே இதன் பின்னணயில் உள்ளது.
முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுநிறுத்த வேண்டும். இன்று மத மோதலை உண்டாக்கும் வகையில் செயல்படும் அடிப்படைவாத சக்திகளை, திமுக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மோசமாகிவிடும். இந்து கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்துக்களை ஏமாற்றுவதற்காக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது. முருகப்பெருமானின் முதலாவது படைவிடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்ட முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள், மற்றொரு மதத்தின் நம்பிக்கைகளை புனிதத்தை மதிக்க வேண்டும். அப்படி மதிக்க மனம் இல்லை என்றாலும் இழிவுப்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.