பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக அணியும் பங்கேற்றுள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய மு.க.ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.