சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் சாம்சங் தனியார் ஆலை செயல்படுகிறது. அங்கு பணியாற்றும் 1000 மேற்பட்ட பணியாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற் சங்கத்துக்கு அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கு மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் முன்னின்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த அக்டோபர் 14-ம் தேதி வழக்கம் போல சாம்சங் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சி.ஐ.டி.யு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தொழிற் சங்க பதிவு குறித்து தமிழக அரசும், பதிவு துறையும் முடிவெடுக்க ஆறு வாரம் கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், ஆறு வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது தமிழ்நாடு அரசு.