சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
வடஆப்பிரிக்க நாடான சூடானை சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஒமர் அல் பஷீரை கடந்த 2019-ம் ஆண்டு அந்த நாட்டு ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியது. அதன் பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசை கலைத்த ராணுவம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக தன்வசமாக்கியது. அப்போது முதல் ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக சூடான் முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் நேற்று முன்தினம் ராணுவ ஆட்சி எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான மக்களை கலைந்து செல்லும்படி ராணுவத்தினர் எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறியதால் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.