வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் கைது செய்யப்படாமல் உள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக, வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் சிபிசிஐடி போலீசார் சார்பில் இந்த வழக்கு பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வராததால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள கல்பனா தத் உள்ளிட்ட அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வசந்தி இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றார். அதன்படி, இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், விசிக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட 3 பேரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கு புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.