முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப்.10-ல் அமைச்சரவை கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்​றது. அந்த விவாதத்​துக்கு முதல்வர் ஸ்டா​லின் 11-ம் தேதி பதில் அளித்​தார். மொத்தம் 6 மசோதாக்​கள் நிறைவேற்​றப்​பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடா​மல் பேரவையை ஒத்​திவைக்​கப்​படு​வதாக பேர​வை தலை​வர் அப்​பாவு அறி​வித்​தார்​.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

சட்டப்பேரவையில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாகவும், அதில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும். மேலும், தமிழக அரசு சார்பில் சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.