கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாவது:-
தமிழக அரசை பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. குண்டாஸ் போடும் அளவிற்கு அரசு உள்ளது. மோடியை விமர்சிக்காத ஊடகம் இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில்கூட கோர்ட்டு சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.
திருப்பரங்குன்றம் என்றாலே முருகர் இருக்கும் இடம்… சிறுபான்மை மக்கள் வாக்குகளை வாங்குவதற்காக இரட்டை வேடம் போடுகிறீர்கள். கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஈரோடு களத்தில் ஒற்றை ஆளாக தி.மு.க. நிற்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாத போதும் மக்களை அடைத்து வைத்து தான் வருகின்றனர். மக்கள் வழங்கும் வாக்குகளை பார்க்கலாம்.
யார் அந்த சார்..? என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்மை வெளியிட்டால், அது தமிழக அரசுக்கு தலைகுனிவு. வளர்ச்சியையும், சுற்றுப்புறச் சூழலையும் ஒருசேர கையாள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான உதவியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க உறுதுணையாக இருப்போம். கோவை மெட்ரோ பணிகள் மெதுவாக துவங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.