நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 6) நெல்லை வந்துள்ளார். திமுகவினர் மற்றும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் ரூ.3,800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார். இதனால் நெல்லை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின், விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, டி.ஆர்.பி. ராஜா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.2.2025) திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற இருவேறு நிகழ்ச்சிகளின்போது, முதலாவதாக 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 ஜிகா வாட் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார்.
அடுத்ததாக, 2,574 கோடி ரூபாய் முதலீட்டில், 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் 6 ஜிகாவாட் அலகு உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 31 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற இந்திய குழுமமான, டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ், டைடன், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள், தனிஷ்க் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ஆம் ஆண்டு ஜுலை மாதம், இத்திட்டத்திற்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார். பின்னர், முதலமைச்சர் தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் முதலமைச்சர் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதிக திறன் கொண்ட சோலார் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் லிமிடெட், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட 1.3 ஜிகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இதன் ஆலை 2021-ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2,574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் 6 ஜிகா வாட் அலகு உற்பத்தித்திறன் கொண்ட ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாநிலத்தில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் செய்வதற்கு உகந்த சூழலமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மேன்மேலும் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருகின்றனர். இதற்கு, இம்முதலீடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண்ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., டாடா பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.பிரவீர் சின்ஹா மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.டிபேஷ் நந்தா, விக்ரம் சோலார் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் ஹரிகிருஷ்ண சௌத்ரி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க்யானேஷ் சௌத்ரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.