கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு, ஓடும் ஆட்டோ ரிக்ஷாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சேலத்தில் பணிபுரிந்து வந்தார். மாதவரத்தில் உள்ள தனது உறவினரைப் பார்க்க சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறினார். திங்கட்கிழமை இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு, மாதவரத்திற்கு மற்றொரு பேருந்திற்காகக் காத்திருந்தபோது, ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் அவருக்கு ஒரு சவாரி வழங்கினார். அவர் மறுத்ததால், ஓட்டுநர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்தி உள்ளார்.
சில கிலோமீட்டர் ஓட்டிய பிறகு, மேலும் இரண்டு பேர் வாகனத்தில் ஏறினர். ஆட்டோரிக்ஷா ஜிஎஸ்டி சாலையிலும் பின்னர் இரும்புலியூர் சாலையிலும் சென்றபோது, சிறுமி கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அப்பெண் கத்திய நிலையில், அந்த வழியாகச் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். ரோந்துப் படையினர் விரைவாக வாகனத்தைக் கண்டுபிடித்து துரத்தத் தொடங்கினர். இருப்பினும், ஆட்டோரிக்ஷா நெற்குன்றத்தில் ஒரு குறுகிய பாதையில் நுழைந்தது, அங்கு குற்றவாளிகள் அப்பெண்ணை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அந்தப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் எஸ். மோகனிடம் நடந்த சம்பவத்தை அப்பெண் விவரித்த நிலையில், அப்பெண்ணை கோயம்பேடு அருகே உள்ள மாதா கோயில் தெருவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒருந்த போலீஸ் ரோந்துக் குழு அப்பெண்ணை மீட்டது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் தயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார் என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையத்தில் இருந்து 18 வயதுள்ள இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்கிற செய்தி வேதனையளிக்கிறது. மேலும் சமூக பொறுப்புணர்வுள்ள மனிதர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் மூலம் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார் என்கிற செய்தி ஆறுதல் அளித்தாலும். தமிழகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஊர்தோறும் படுகொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது நம் அனைவரையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.
தமிழகத்தில் பெருகிவரும் குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக விளங்குவது போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் அதிகரித்திருப்பதே காரணம் என்கிற குற்றச்சாட்டு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து வரும் கருத்தாக இருக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் தமிழகத்தில் அரங்கேறி வரும் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அறவே ஒழிக்க வேண்டுமானால் முதலில் போதைப்பொருள் பரவலாக்கலை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
கடந்த மாதம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் குடும்பத்தோடு கடற்கரைக்கு சென்றிருந்த பெண்களிடம் 10 க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அந்த சமூக விரோதிகள் அந்த குடும்பப் பெண்களிடம் கூறி மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊடகங்களுக்கு அச்சத்தோடு வாக்குமூலம் அளித்ததை நாம் அனைவரும் கண்டோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சிலர் பயணித்த கார் ஒன்றை திமுக கொடி கட்டிய காரில் வந்த சமூக விரோதிகள் துரத்திச் சென்ற அச்சமூட்டும் காணொளி ஒன்றை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நாம் அனைவரும் கண்டோம்.
கடந்த மாதம் “அண்ண பல்கலைகழக வளாகத்தில்” மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சோகம் மறைவதற்குள்…
இந்த மாதம் “கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையத்திலிருந்து” ஒரு பெண் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சோக நிகழ்வு நடந்தேறி உள்ளது.
குற்றங்களை தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுவதெல்லாம் வழக்கம் போல யாரோ ஒருவர் துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனப்பாடம் செய்து பேசுகிற வசனம் தானே ஒழிய வேறொன்றும் இல்லை.
திறனற்ற திமுக ஆட்சியில் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. திமுகவுக்கு புரியும் வகையில் அவர்கள் பாஷையில் சொல்லவேண்டுமானால்..!! “ஆளத்தகுதியற்ற திமுகவால் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது” என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.