ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம்: நிதின் கட்கரி!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து சென்று வரும் உள்ளூர்மக்களின் வசதிக்காக மாத சலுகை கட்டணத்தில் ‘பாஸ்’ பெறும் வசதியும் உள்ளது. இதற்கிடையே, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் நெரிசலை தவிர்க்க மத்திய நெடுஞ்சாலை துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பயண தூரத்தின் அடிப்படையில் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டணத்தை ஒருமுறை செலுத்தி பாஸ்பெற்றுக் கொண்டால், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தாமல் சென்று வரும் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைப்படி, ரூ.340 செலுத்தி ஒரு மாதத்துக்கு உள்ளூர் பாஸ் பெறலாம். இதன்மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வரலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.4,080 செலவாகும். ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் பெறும் வசதி அமலுக்கு வந்தால், இதிலும் ரூ.1,080 மிச்சமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.