முடா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (முடா) நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர் ஸ்நேகமாயி கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவினை கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது.

அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கினை தற்போது லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு பெறும் ஆறுதலை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை வரவேற்பதாகவும், தீர்ப்பினை மதிப்பதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமூக ஆர்வலரும், மனுதாரருமான கிருஷ்ணா, ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக கிருஷ்ணா, முதல்வர் மற்றும அவரது குடும்பத்தினரால் தான் மிரட்டப்பட்டதாவும், தனக்கு பணம் தர முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். முடா நில ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கிருஷ்ணாவும் ஒரு முக்கியமான புகார்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது மனுதாரரின் வழக்கறிஞர், “லோக் ஆயுக்தா ஒரு மாநில அரசின் ஆணையம் என்பதால் விசாரணை நேர்மையாக நடக்காது. குற்றம்சாட்டப்பட்டவர் மாநிலத்தின் முதல்வர். வழக்கின் இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விசாரணை மேற்கொள்ளும் உரிமை இல்லை என்றும், எந்த அமைப்பு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்க முடியாது.” என்று தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணை நடத்தும் அமைப்பினைத் தேர்வு செய்ய முடியாது என்றால் புகார் கொடுத்தவர் மட்டும் எவ்வாறு அதனைத் தேர்வு செய்யமுடியும்.” என்று வாதிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்றுள்ள மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “இது அரசுக்கும் முதல்வருக்கும் மிகப்பெரிய ஆறுதலான விஷயம். சுதந்திரமான அமைப்புகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். சந்தேகம் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அமைப்புகள் மீது நாம் சிறிது நம்பிக்கை கொள்ள வேண்டும். இனி முதல்வரை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கு அவசியமிருக்காது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, முடா நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை முதல்வரின் மனைவி பார்வதிக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.