டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தில் ஓரிடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இந்த முடிவுகள் குறித்து கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், ‘டெல்லி சட்டசபை தேர்தலில், பொது நலன் சார்ந்து அரசுக்கு எதிரான சூழலை உருவாக்கினோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. அவர்களது கருத்தை ஏற்கிறோம். கடினமான சூழலிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக பணியாற்றினர். ஆனால் இன்னும் கடின உழைப்பும் போராட்டமும் தேவை. வரும்நாட்களில் மாசுபாடு, யமுனை நதி தூய்மை, மின்சாரம், சாலைகள், குடிநீர் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பும். பொதுமக்களுடன் தொடர்பில் இருப்போம்’ என்று அதில் பதிவிட்டிருந்தார்.