ஆம் ஆத்மி எம்.பி.யாக இருந்த ஸ்வாதி மலிவால் கடந்த ஆண்டு மே மாதம், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஸ்வாதி. மேலும், டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலின்போது யமுனை நதி மாசுபாட்டைக் கண்டித்து கேஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஸ்வாதி மலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மகாபாரத கதையில் திரவுபதியை அவமதிக்க, கவுரவர்கள் அவரை துகில் உரியும் ஓவியத்தையும் ஸ்வாதி மலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, “பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால், அதைச் செய்தவர்களை கடவுள் தண்டித்திருக்கிறார். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சினைகளால்தான் அர்விந்த் கேஜ்ரிவால் தனது பதவியை இழந்தார். அவர்கள் (ஆம் ஆத்மி) பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்களிடம் சொல்வதைச் செய்ய வேண்டும், ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு கூறியதற்கு மாறாக செயல்டுகிறது. பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும்” என்றார்.