ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்த நிலையில் திமுக அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். “டெபாசிட் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அது ஒரு பொழுதுபோக்கு மன்றம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் மறைந்த நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 114,982 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,940 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நோட்டா 6066 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி உட்பட திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சீதாலட்சுமி 23940 வாக்குகள் மட்டுமே பெற்றதால் அக்கட்சி வேட்பாளர் டெபாசிட் கூட பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உட்பட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. எங்கள் ஆட்சியை மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று அர்த்தம். காலநிலை ஊருக்கு ஒவ்வொரு மாதிரி மாறும் ஓரிடத்தில் குளிராக இருக்கும் ஓர் இடத்தில் வெப்பமாக இருக்கும். அதனால் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கும். ஆகவே டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தாமரை எல்லா ஊரிலும் மலர்ந்திருக்கிறதா என்று தெரியாது, ஆனால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது, அந்த கூட்டத்தினாலும் முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. டெபாசிட் வரும் டெபாசிட் போகும், அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அது ஒரு பொழுதுபோக்கு மன்றம்” என கூறினார்.