சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போதைய தகவல்களின் படி பாதுகாப்புப் படை தரப்பில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நக்சலைட் இயக்கங்கள் (ஆயுதப் போராட்டம் நடத்தும் இடதுசாரிகள்) இணைந்து உருவானதுதான் இன்றைய மாவோயிஸ்டுகள் இயக்கம். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருந்த காலமும் இருந்தது. தெலுங்கானா, ஒடிஷா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மத்திய- கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக வேர்பிடித்திருந்தது மாவோயிஸ்டுகள் இயக்கம். இவர்களது பக்கபலமாக இருந்தவர்கள் பழங்குடிகள். பெரும்பாலான மலை பிரதேசங்கள் வளர்ச்சி அடையாத, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தாத காலத்தில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் படிப்படியாக அழித்தொழிக்கப்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகளுக்குப் புகலிடங்களாக இருந்த வனப்பகுதிகள், பழங்குடிகள் மய்ய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள், இந்தியாவில் இறுதி அத்தியாயத்தில் இருக்கின்றனர்.
சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில எல்லைகள் இணையும் பகுதிகளில் மட்டுமே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தார் வனப்பகுதிகள் இன்னமும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதல் பல மணிநேரங்களாக நீடித்தது. இம்மோதலில் மொத்தம் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை தரப்பில் 2 வீரர்கள், வீர மரணம் அடைந்துள்ளனர்; மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அண்மைக்காலத்தில் சத்தீஸ்கரில் பெரும் எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.