திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பிய மதுரை ஆட்சியருக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், தமிழ்ச்செல்வன், ரமேஷ் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியருக்கு அனுப்பிய நோட்டீசில், ‘திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகிலுள்ள தர்காவில் விலங்குகளை பலியிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை கருத்தில் கொண்டு சில நாளாக திருப்பரங்குன்றத்தில் அரசியல் மற்றும் மத பதற்றம் நிலவுவதாக எங்கள் கட்சிக்காரர் கூறுகிறார். எங்களது கட்சிக்காரரும், அதிமுகவினரும் இரு பிரிவினரிடையேயும் அமைதியை ஏற்படுத்துகின்றனர்.
இருப்பினும், அதிமுகவை அவதூறு செய்யும் நோக்கத்துடன் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கவே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் பிப்., 5ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் தவறான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.
திருமங்கலத்தில் 30ம்தேதி நடந்த கூட்டத்தில் அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் இரு மதப் பிரிவுகளும் தங்கள் தற்போதைய வழக்கப்படி வழிபடுவர் என, எடுத்த முடிவுக்கு அதிமுக பிரதிநிதிகள் அதில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் கூறியது தவறானது. சம்பந்தப்பட்ட ஆர்டிஓவிடம் உண்மைகளை சரிபார்க்காமல் மறைமுக நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளீர்கள். அரசியல் எதிரிகளின் ஆலோசனை பேரில் மறைமுக நோக்கத்திற்காக செய்யப்பட்டு இருக்கிறீர்கள்.
அமைதிக் கூட்டத்திற்கு அழைக்காமல் இருந்துவிட்டு, கூட்டத்தில் கையெழுத்திட அதிமுக மறுத்ததாக உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுவது கட்சியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் நோக்கமாகும். ஒரு கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்பும் சம்பந்தப்பட்ட நபரை/கட்சியை அவசியம் தொடர்புகொள்ள வேண்டும். அவர்களது பதிலும் பெறவேண்டும். இந்த அடிப்படை விதியை பின்பற்றவில்லை. கடந்த 6ம் தேதி எங்கள் கட்சிக்காரரும் அவரது கட்சிக்காரர்களும் உங்களை நேரில் சந்தித்து முந்தைய செய்திக்குறிப்பைத் திரும்பப் பெற, உண்மைகளுடன் புதிய அறிக்கையை வெளியிட எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். எங்களது கோரிக்கை படி நீங்கள் செயல்படவில்லை.
திருப்பரங்குன்றம் கோயில்-தர்கா பிரச்சினையில் அதிமுகவுக்கு எதிராக அவதூறான விஷயங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். ஏற்கெனவே அவதூறான செய்தியை வெளியிட்டமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள். தவறினால் எங்கள் கட்சிக்காரர் உங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்.’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜன் செல்லப்பா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பங்குன்றம் மலை விவகாரம் குறித்து கடந்த 30ம் தேதி நடந்த அமைதி கூட்டத்திற்கு முறையான அழைப்பு இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோருக்கும் அழைப்பு இல்லை. ஆட்சியர் தவறை உணர்ந்து அவரது அறிக்கையை திரும்பப் பெறவேண்டும். இல்லை என்றால் ஆட்சியர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம். மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கருத்து, மரபுகளை சொல்கிறதோ அதை ஆராய்ந்து நாங்கள் முடிவெடுப்போம். இப்பிரச்சினை அரசு கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.