முதல்வர் கூறுவது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது: எச்.ராஜா!

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடத்தும் மக்கள் சேவை மையம் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம், கோவை ராமநாதபுரம் பகுதியில் நேற்று நடந்தது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

எம்எல்ஏ ஆவதற்கு முன்னரே வானதி சீனிவாசன், இது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்தார். தொடரும் அவரின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், ஒருபுறம் சாலை அமைக்கு பணி மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் குடிநீர், வடிகால் போன்ற மேம்பாட்டு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது. மருத்துவரை சந்தித்தேன், 2004-ம் ஆண்டு அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி ரூ. 2,400. இன்று அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் நோட்டீஸில் ரூ.56,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் கூறினால் கூட யாரும் கேட்பதில்லை என திமுக எம்பி ராஜ்குமாரே கூறுகிறார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என கூறி வருகின்றனர். நான் ஏற்கனவே என்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன். ரயில்வேதுறையில் மட்டும் 2025-26-ம் ஆண்டுக்கு தமிழ்நாட்டில் ரூ. 6,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ.3,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று முதல்வர் பொய் பேசலாமா?

ஜிஎஸ்டி வசூலில் 71 சதவீதம் மாநிலங்களுக்கு கிடைத்து விடுகிறது. மீதமுள்ள 29 ரூபாய் சொச்சமும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறினால், மத்திய அரசுக்கு கிடைக்க கூடியதே அந்த 29 சொச்சம் தான். அதையும் வழங்க வேண்டும் என கேட்பது நியாயமா. இவ்வாறு பெறப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய நிதியமைச்சர் விருப்பத்திற்கு பகிரந்து அளிக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் தொகையைப் பொறுத்து, நிதி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ 4,33,000 கோடியாக இருந்த கடன், தற்போது ரூ. 8,88,000-ஆக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் ரூ.9,88,000 ஆகும். 2006-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.28 ஆயிரம் கோடி மட்டும் தான். தற்போது ஊழலால் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதை நிறுத்தினாலே மக்கள் மிகவும் சௌகரியமாக இருப்பார்கள். எனவே தமிழக அரசு மத்திய அரசை குறை கூறுவதை விடுத்து ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும். இடைத்தேர்தல் வெற்றி மூலமாக எதையும் சாதித்து விட முடியாது, 2026-ம் ஆண்டு திமுக அரசு தோல்வியடையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.