பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் சென்றார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று இரவு அவருக்கு விருந்து அளித்தார்.
பாரிஸில் இன்று நடைபெறும் 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கிகளை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அவர் நாளை மறுநாள் சந்திக்க உள்ளார். கனடா, மெக்ஸிகோ, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்து வருகிறார். ஆனால் இந்தியா மீது அவர் நேரடியாக கூடுதல் வரி விதிக்கவில்லை. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவின் மின்னணு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்ஸில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை ஏற்க உள்ளேன். இந்த மாநாட்டில் பாதுகாப்பான, நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.
இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து அதிபர் மெக்ரானுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன். மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைக்கிறேன். உலகளாவிய நன்மைக்கான ஆற்றலைப் பயன்படுத்துவதற்காக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்த கூட்டமைப்பின் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தை பார்வையிட உள்ளேன். முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறேன்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின்பேரில் அமெரிக்காவிற்கு 2 நாள் பயணமாக செல்கிறேன். எனது நண்பர் ட்ரம்பை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது முதலாவது பதவிக் காலத்தில் இருந்து இருவரும் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்கிறேன். தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விநியோகச் சங்கிலி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த இந்த சந்திப்பு முக்கிய வாய்ப்பாக அமையும். இருநாடுகளின் மக்கள் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். உலகத்துக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.