சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்: ட்ரம்ப் எச்சரிக்கை!

“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹமாஸ்கள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன். ஆனால் ஹமாஸ்கள் பிணைக் கைதிகளை இப்போது விடுவிப்போம், அப்போது விடுவிப்போம் எனக் கூறுகின்றனர். வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். சிறிது சிறிதாக அல்ல, பெரியளவில் தாக்குதல் நடத்தப்படும், மீண்டும் நரகத்தைச் சந்திக்க நேரிடும். எனினும், இது எனது தனிப்பட்ட கருத்து. இதனை இஸ்ரேல் நிராகரிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் நட்புறவின் அடிப்படையில் ட்ரம்ப் இவ்வாறாக ஒரு கோரிக்கை வைத்தால் அதை உடனே செயல்படுத்த இஸ்ரேல் தயங்காது என்றே போர் நிலவரங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காசா பற்றி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து வருகிறார். முன்னதாக, “காசா பகுதியில் இனி மக்கள் வாழ முடியாது. காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவை அமெரிக்கா கைப்பற்றும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல், “காசாவை வாங்க நான் உறுதி பூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் போன்றது. அதை மாற்றியமைக்க வேண்டும். காசாவை வாங்கிய பின்னர் அதனை மீள்கட்டமைக்கும் பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். இனி மக்கள் மீண்டும் காசாவுக்குள் செல்ல அங்கு ஏதுமில்லை. அது வெறும் இடிபாடுகளால் ஆனது. எஞ்சிய சில கட்டிடங்களும் இடிக்கப்படும். காசா மக்கள் மீண்டும் அங்கு திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் காசாவுக்குள் திரும்ப விரும்பமாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ஹமாஸ் கடும் எதிர்வினையாற்றியிருந்தது. “வாங்கவும், விற்கவும் காசா ஏதும் சொத்து கிடையாது, அது எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இப்போது பிணைக் கைதிகள் விவகாரத்தை முன்வைத்து ஹமாஸ்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். ஏற்கெனவே ட்ரம்ப்பின் வரிவிதிப்புகளால் வர்த்தகப் போர் உருவானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ட்ரம்ப் இப்போது காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும் என்ற மிரட்டலை விடுத்துள்ளார். இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏராளமானோரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, இஸ்ரேல் காசாவில் நடத்திய பதிலடி தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மாதங்கள் நீடித்த கொடூரமான மற்றும் அழிவுகரமான இந்தப் போரால் 90 சதவீத காசா மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் உதவியால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பிலும் பல கட்டங்களாக பிணைக் கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹமாஸ் தரப்பில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் ஒரே கட்டமாக வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.