ஜம்மு காஷ்மீரின் அக்னூர் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் கேப்டன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும் வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் நவ்ஷெரா செக்டார் கலால் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தார். முதல்கட்ட விசாரணையில் எல்லைக்கு அப்பால் இருந்து அவர் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது.