முதல்வர் மருந்தகம் திட்டம் புதிய லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்!

ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் மருந்தகம் திட்டம் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் புதிதாக லைசென்ஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் மருந்துகளை விற்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்துள்ள திட்டம் ”முதல்வர் மருந்தகம் திட்டம்”. இதனை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தனர்.
இதன்மூலம் பொதுப்பெயர் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் வாங்கலாம். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என்றும், அதன்பிறகு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 840 மருந்தகங்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மருந்தகங்கள் நடப்பு பிப்ரவரி மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் மருந்தகங்கள் அமைக்க டி.பார்ம் அல்லது பி.பார்ம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மருந்தாளுனராக உரிமம் பெற்ற தொழில் முனைவோர்களாக இருப்பது அவசியம். ஒருவேளை மேற்குறிப்பிட்ட சான்றிதழ் இல்லையெனில் மேற்சொன்ன உரிமம் பெற்ற நபரின் இசைவு கடிதத்தை பெற்று சமர்பிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களும் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பரிசீலனை செய்யப்படும். இந்த திட்டத்திற்காக கடன் பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர்களுக்கு 3 லட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும். அதில் 50 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிக்காக ரொக்கமாக வழங்கப்படும். பின்னர் 50 சதவீதம் மருந்துகளாக வழங்கப்படும். ஒரே பகுதியில் இருந்து பல்வேறு விண்ணப்பங்கள் வந்திருந்தால், டி.பார்ம் அல்லது பி.பார்ம், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள், எளிதில் அணுகக்கூடிய இடவசதி ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.