அதிமுக துரோகிகளின் மனுவை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது: சிவி சண்முகம்!

குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் அதிமுகவினரே அல்ல என்று கூறியுள்ள சிவி சண்முகம், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிமுகவின் சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இருப்பது 2 அதிகாரம் தான். 29ஏ-வின் படி கட்சியின் சட்டத் திருத்தங்களை ஆணையம் பதிவு செய்ய வேண்டும். அதன்பணி, ஒரு குமாஸ்தா வேலை தான். நான் கொடுப்பது முறையாக இருக்கிறதா என்பதை பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. சட்டத்திட்டங்களில் ஆட்சேபணை இருந்தால், அதனை விசாரணை செய்ய நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம். இதனை தேர்தல் ஆணையமும் வழக்கு விசாரணையின் போது ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்டது. அதன்மீது விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.

இந்த தீர்ப்பிலும் கூட, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுவை விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதனைதான் அதிமுக தரப்பில் கோரிக்கையாக வைத்தோம். அந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதிமுக உறுப்பினர் என்ற போர்வையில் கொடுத்துள்ள மனு போலியானது. ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டு கட்சியால் நீக்கப்பட்டவர்தான் புகழேந்தி. நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.