பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் மாணவிகள் 14417 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பிரச்சனைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் உடனடியாக உதவி மையத்துக்கு அழைக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.