அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கும் என்னை சோதித்துப் பார்க்காதீர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
நான் பல்லாண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பல தலைவர்களை சந்தித்துள்ளேன். என்னை யாரும், எதிலும் சிக்கவைக்க முடியாது.எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்லும் எனக்கு, அவர்கள்தான் வழிகாட்டிகள். அதிமுக தொடங்கப்பட்டபோது நான் சாதாரண தொண்டன். எனக்கு பொருளாளர் பதவியை வழங்கி, பொதுக்குழுவை நடத்துமாறு கூறியவர் எம்ஜிஆர். அவரது உத்தரவின் பேரில் நாங்கள் பச்சை குத்திக் கொண்டோம். எம்ஜிஆருடன் 14 முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கிராமம் வாரியாக அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால்தான் நான் கலந்து கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏதேதோ பேசுகிறார்கள். நான் கேட்காமலேயே என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள். நான் நேர்மையான பாதையில், தன்னலம் கருதாது பாடுபடுகிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்தபோதும், அதுகுறித்து நான் அக்கறைகாட்டவில்லை. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். நான் தெளிவாகவும், தெளிந்த சிந்தனையோடும் இருக்கிறேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கிறேன். இதை மறந்து விடக்கூடாது.
ஜெயலலிதா விரலசைவுக்கு ஏற்ப செயல்பட்டவன் நான். ’எந்த பணியைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர், விசுவாசமானவர் செங்கோட்டையன்’ என்று ஜெயலலிதா என்னைப் பாராட்டியுள்ளார். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்றக் கூடியவன். என்றைக்கும் தலைவராக வேண்டுமென கருதியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.