இலங்கையில் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு!

இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறையாக டெண்டர் வெளியிடப்படாமல் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை மின் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் புகார் எதிரொலியால் அதானி குழுமத்துடன் உடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை 2 வாரங்களுக்கு முன்பு இலங்கை அரசு ரத்து செய்தது.

மன்னார் – விடத்தல்தீவு பகுதியில் அதானியின் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக இலங்கை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தது. இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், திட்டத்தை கைவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கென்யாவிலும் அதானி நிறுவனத்தின் மின்சார திட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ள நிலையில், இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.