சீனாவின் நீர் மின்நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பிரம்மபுத்திராவில் அந்நாடு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுஷ்மிதா தேவ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் எழுத்துபூர்வாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:-
நீர் மின்நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பிரம்மபுத்திரா நதியில் சீனா செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேசத்தின் நலனை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லை தாண்டி பாயும் நதிகள் தொடர்பான பிரச்சினைகளில், கடந்த 2006-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் சீனாவுடன் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கிடையே பாயும் நதியின் அதிக பயன்பாட்டு உரிமையை கொண்டு கீழ்பகுதியில் உள்ள நாடாக, மத்திய அரசு தனது கவலைகளையும், கருத்துகளையும் தொடர்ந்து சீன அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறது.
நதியின் மேல் பகுதியில் உள்ள நாட்டின் நடவடிக்கைகள், கீழே இருக்கும் நாடுகளை பாதித்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திராவின் முக்கியமான துணை நதிகள் மற்றும் நதிப் படுகைகளில் நீர் மின்திட்டங்களின் மூலம் வரும் சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்கள் மற்றும் நீரினைக் கொண்டு செல்லும் திறன் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ நதிக்கரையில் 60,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மெகா அணையைக் கட்டும் செயல் திட்டத்தில் சீன அரசு ஈடுபடத் தொடங்கியது. இதுவே ‘சூப்பர் டேம்’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.