உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப், புதின் பேச்சுவார்த்தை!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் உரையாடி உள்ளார். இதனை தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் நாடுகளின் பலங்களைப் பற்றியும், ஒன்றாகச் செயல்பட்டால் கிடைக்கும் பெரும் நன்மைகளைப் பற்றியும் பேசினோம். முதலில், நாங்கள் இருவரும் ரஷ்யா/உக்ரைனுடனான போரில் நடக்கும் லட்சக் கணக்கான இறப்புகளை நிறுத்த விரும்புகிறோம்.

எனவே, இவ்விஷயம் தொடர்பாக இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளோம். அவர்கள் இந்த உரையாடல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரிப்பார்கள் என்று தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் இணையுமா என்பதை தெளிவுபடுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனிடையே, உக்ரைன் குறித்து விவாதிக்க மாஸ்கோவுக்கு வருகை தர டொனால்ட் ட்ரம்ப்க்கு, விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும், புடினும் ட்ரம்பும் எதிர்காலத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “ரஷ்ய அதிபர், அமெரிக்க அதிபரை மாஸ்கோவுக்கு வருகை தருமாறு அழைத்தார். மேலும், உக்ரைன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வர உள்ள அமெரிக்க அதிகாரிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். புடினும் ட்ரம்பும் நேரில் சந்தித்துப் பேசுவது உட்பட தனிப்பட்ட தொடர்புகளைத் தொடரவும் ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மார்க் ஃபோகலை ரஷ்யா விடுவித்ததை அடுத்து, இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசி உள்ளனர். அமெரிக்கா திரும்பிய மார்க் ஃபோகல், செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் வரவேற்றார்.

ரஷ்யாவால் தவறாகக் கைது செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட அமெரிக்க வரலாற்று ஆசிரியரான ஃபோகல், 2021 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஃபோகலின் விடுதலை உக்ரைனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க உதவும் என்று பேசினார்.