தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தொடர்ந்த வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. தற்போது பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக காவல்துறையில் புகாரளித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் சீமான் மீது இந்த புகாரை விஜயலட்சுமி அளித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் சீமான் ஆஜராகியிருந்தார். தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு இருந்த புகாரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெற விஜயலட்சுமி ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேள்வி எழுப்பிய நீதிபதி, “இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன் கொடுமை வழக்கு என தெரிவித்தார்.
சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வரும் 19 ஆம் தேதி விசாரித்து அன்றைய தினமே தீர்ப்பு அளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.