அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய உளவு துறை இயக்குநர் துளசி கப்பார்டு, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். சிஐஏ, என்எஸ்ஏ உட்பட அமெரிக்காவின் 18 புலனாய்வு அமைப்புகள் துளசியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட இவர் சிறுவயது முதலே இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். பிரதமர் மோடி, துளசி சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். இதன்பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் மட்டுமே அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசி உள்ளனர். இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேசினர். ஜப்பான் பிரதமர் இஷிபா, சீனாவால் எழுந்துள்ள பாதுகாப்பு, வர்த்தக சவால்கள் குறித்து ட்ரம்புடன் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் அதிபர் ட்ரம்பை சந்தித்த 4-வது உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 77.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து 42.2 பில்லியன் டாலர் மதிப்பு பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
சீன பொருட்கள் மீதான வரியை அதிபர் ட்ரம்ப் உயர்த்தி உள்ளார். இதன்காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அதேநேரம் இந்தியாவில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதியும் கணிசமாக அதிகரிக்கும். அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் தனது டெஸ்லா காரை இந்தியாவில் விற்பனை செய்ய நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார். இதை மத்திய அரசு சொகுசு காராக கருதி அதிக வரியை விதிக்க முடிவு செய்தது. ஆனால் டெஸ்லா காரை மின்சார வாகனமாக கருதி சலுகை அளிக்க வேண்டும் என்று எலன் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி மேற்கொண்டனர். இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் கூட்டாக ரோந்து பணியை மேற்கொள்வது குறித்து ட்ரம்பும், மோடியும் முக்கிய ஆலோசனை நடத்தினர். ராணுவ, வர்த்தகரீதியாக சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்து கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உக்ரைன், காசா போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடிக்கு மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இதன்படி உக்ரைன் போர், காசா போருக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ட்ரம்பும் மோடியும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
கடந்த காலங்களில் இந்தியா குறித்து டொனால்டு ட்ரம்ப் சில எதிர்மறையான கருத்துகளை கூறியிருக்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை அவர் ஒருபோதும் விமர்சித்தது கிடையாது. தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இது இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.