மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டது: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டதற்கான நேரடி சாட்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் மணிப்பூர் மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூரில் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி நிலவுவதாலேயே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஜி, மத்தியில் 11 ஆண்டுகள் ஆட்சி செய்வது உங்கள் கட்சிதான். மணிப்பூரை கடந்த 8 வருடங்களாக ஆட்சி செய்வதும் உங்கள் கட்சிதான். அதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது பாஜகவின் பொறுப்பு. தேசிய பாதுகாப்புக்கும் எல்லைக் கண்காணிப்புக்கும் உங்களின் அரசுதான் காரணம். மணிப்பூரில் நீங்கள் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணித்திருப்பது, உங்கள் சொந்த கட்சியின் ஆட்சியை வீழ்த்தியிருப்பது மணிப்பூர் மக்களை நீங்கள் எவ்வாறு தோல்வியடையச் செய்துள்ளீர்கள் என்பதற்கான நேரடி சாட்சி இது.

உங்களுடைய இரட்டை எஞ்சின் அரசு மணிப்பூரின் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துவிட்டது. இப்போது, நீங்கள் மணிப்பூருக்குச் சென்று, மக்களின் வலிகள் துயரங்ரகளைக் கேட்டு, அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டி நேரம் இது. அதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் உள்ளதா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது, மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியாத தங்களின் இயலாமையை தாமதமாக பாஜக ஏற்றுக் கொண்டுள்ளதாகும். மணிப்பூருக்கான தனது நேரடிப் பொறுப்பை இனியும் பிரதமர் மோடி நிராகரிக்க முடியாது. இறுதியாக, பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று, அங்கு அமைதியை மீட்டெடுப்பதற்கான அவரின் திட்டத்தை மணிப்பூர் மற்றும் இந்திய மக்களுக்கு விளக்குவாரா?” என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்​குடியின மக்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதன்​காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்​டது. இரண்டரை ஆண்டு​களாகி​யும் மணிப்​பூரில் இன்ன​மும் இயல்பு நிலை திரும்ப​வில்லை.

இந்த சூழலில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்​தார். மாநிலத்​தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆளுநர் அஜய் குமார் பல்லா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு​விடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்​தார். அதில் மணிப்​பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்செய்ய ஆளுநர் பரிந்​துரை செய்திருந்​தார். இதைத் தொடர்ந்து மணிப்​பூரில் நேற்று வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்​தப்​பட்​டது.