“பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை பிப்ரவரி 18-ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “ஏற்கெனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலை வழிப்பாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதுகுறித்த பிரச்சினையை எழுப்புவது சரியல்ல. பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை. அதுமட்டுமின்றி, பேரணிக்கு வேறு எந்த இடத்தில் அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்சினைகளை உருவாக்கும். ஏற்கெனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மீண்டும் அதே பிரச்சினைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது.” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக இரண்டு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரு பிரிவினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை உண்டாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, அந்த சம்பவத்தில் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை குறித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத்தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது மீண்டும் பிற மதத்தினரை தூண்டி பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.
மத ரீதியிலான பதற்றங்களைத் தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, பொது ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையைப் பொருத்தவரை இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியாக வசித்து வருகின்றனர். ஒற்றுமையில் வேற்றுமைதான் நம் நாட்டின் பலம். எனவே, அனைத்து மதத்தினர் மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மத நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரையும் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது. கோயிலுக்குச் சென்று வழிபட எந்தவொரு தடையும் இல்லை” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.