டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், அந்த வணிக வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய 22 வயதான இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உள்நாட்டை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் பெயர் என்ன? துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.
இதுகுறித்து கோபன்ஹேகன் தலைமை காவல் அதிகாரி சோரன் தாமஸென் கூறுகையில், ‘வணி வளாகத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்துள்ளனா். சந்தேகத்தின் பேரில் 22 வயது மதிக்கத்தக்க உள்ளூரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் சிலா் ஈடுபட்டனரா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் தவிா்த்துவிட முடியாது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.