மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய மந்திரியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் மத்திய மந்திரியின் இந்த கருத்துக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய மந்திரி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது முன் மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல.
பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். மாணவர்களின் கல்வியும் மிக முக்கியம். மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தேவையான நிதி உதவியும் மிக முக்கியம். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். “மாற்றான் போக்கு எண்ணத்தோடு” மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.