அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனயில் அனுமதி!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.

தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவர் துரைமுருகன். நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அனைத்துக் கட்சியினரிடமும் நல்ல நட்புறவைப் பேணுபவர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாகவும் பதிலடி கொடுப்பதில் அமைச்சர் துரைமுருகன் பெயர் போனவர்.

அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது 86 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, காய்ச்சல் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் துரைமுருகன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, துரைமுருகனை பார்த்துள்ளனர். அங்கு மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தனர். அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தற்போது சீராக இருக்கும் நிலையில், சிகிச்சைக்கு பிறகு நாளை வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.