மத்திய அரசில் இருப்பது கல்வியின் அருமை, பெருமை தெரியாத கூட்டம்: அமைச்சர் சிவசங்கர்!

“கல்வியின் அருமை, பெருமைகள் தெரியாத கூட்டம் தான் மத்திய அரசில் உள்ளது. வடஇந்தியாவை பொறுத்தவரை ஒரு மொழி கொள்கை தான் உள்ளது. அவர்கள் இந்தியை மட்டும் தான் கற்கின்றனர். நம்மீது மட்டும் தான் தாய் மொழி இல்லாமல் இன்னொரு மொழியை திணிக்கின்றனர்” என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம் சாட்டினார்.

அரியலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோதண்டராமசாமி கோயிலில் தேர் சீரமைக்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. திருத்தேர் சீரமைக்க ரூ.18.5 லட்சமும், திருத்தேர் நிலை நிறுத்த கொட்டகை அமைக்க ரூ.22.5 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (பிப்.17) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை முதல் கட்டமாக முடிவடைந்துள்ளது. 15 நாட்களுக்கு பிறகு அடுத்த அமர்வில் பேசவுள்ளோம். ஒரு சில கோரிக்கைகள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கல்வியின் அருமை பெருமைகளை தெரியாத கூட்டம் தான் மத்திய அரசில் உள்ளது.

இருமொழி கொள்கையை அமல்படுத்தப்பட்ட ஒரே காரணத்தினால் தான் இன்று தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கணினி உள்ளிட்ட பல்வேறு துறையில் உலக அளவில் மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இருமொழி கொள்கைதான் மிகவும் உகந்தது. நம்முடைய தாய்மொழி பயில்வது ஒரு புறம். உலகத்தின் இணைப்பு மொழியாக ஆங்கில மொழியை பயில்வது ஒரு புறம். இதைத்தான் பேரறிஞர் அண்ணா அன்றைக்கே கொண்டு வந்தார். எனவே, இதுவே போதுமானது. மூன்றாவதாக ஒரு மொழியை நமக்கு தொடர்பில்லாத மொழியை திணிக்கும் பொழுது அந்த சுமையை மாணவர்களால் ஏற்க முடியாது. ஒருபுறம் வட இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு மொழி கொள்கை தான் உள்ளது. அவர்கள் இந்தியை மட்டும் தான் கற்கின்றனர். நம்மீது மட்டும் தான் தாய் மொழி இல்லாமல் மற்றொரு மொழியை திணிக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் தொடர்புடைய ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக உள்ளது. ஆங்கிலம் கற்பது போதுமானது. தேசிய கல்விக் கொள்கை என சொல்கின்றவர்களின் மாநிலத்தில் அவர்களுடைய தாய் மொழியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தைப் பார்த்து, பக்கத்தில் உள்ள கேரளாவை பார்த்து அவர்கள் உணர வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதி ஒதுக்குவது போன்ற பல்வேறு நிதி சார்ந்த நெருக்கடிகளை தமிழக முதல்வர் சந்தித்து அதை திறமையாக கையாண்டு வருகிறார். இதனையும் நமது முதல்வர் திறமையாக கையாளுவார். இவ்வாறு அவர் கூறினார்.