நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர பிரதமர் முயற்சிக்காதது ஏன்?: செல்வப்பெருந்தகை!

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரிகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படுகிற வகையில் அமெரிக்காவிலிருந்து இரண்டாவது கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை, கால்களில் விலங்கு பூட்டி 109 பேர் ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, கடந்த வாரம் 104 இந்தியர்கள் இந்த கொடுமையை அனுபவித்தனர். மீண்டும் சுமார் 40 மணி நேர பயணத்தின் போது கால்களில் விலங்கு பூட்டப்பட்டு, கைதிகளை போல மோசமாக நாடு கடத்தப்பட்டதாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபத்தில் அவரை பிரதமர் மோடி சந்தித்த போது இதுகுறித்து பேசியிருக்க வேண்டும். அமெரிக்க நாட்டு சட்டப்படி இப்படித் தான் நடந்து கொள்வார்கள் என்றால், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிற இந்திய பிரதமர், விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏன் முயற்சி செய்யவில்லை?

அமெரிக்காவால் இத்தகைய அவமானத்தையும், இழிவையும் இந்தியர்கள் அனுபவிக்கிற சூழலில் டொனால்ட் ட்ரம்பை நரேந்திர மோடி கட்டித் தழுவி மகிழ்ச்சி காண்பதில் என்ன பெருமை இருக்கிறது? நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரிகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனைவரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் பலர் ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகைகள் சுதந்திரமாக செய்திகள் வெளியிட முடியவில்லை என்பதற்கு விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது சான்றாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.