எனக்காக ராஜன் செல்லப்பா பரிந்து பேசவேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம்!

“எனக்காக ராஜன் செல்லப்பா பரிந்து பேசவேண்டாம். பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து தேர்தலில் திமுகவை எதிர்க்கும் சக்தியை உருவாக்க வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஓபிஎஸ் 6 மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து கொள்வோம் என அண்ணன் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியுள்ளார். நான் அமைதியாக இருக்க வேண்டும் என என்ன காரணத்துக்காக அவர் சொன்னார் என்பது தெரியவில்லை. இப்பிரச்சினை யாரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

எந்தச் சூழ்நிலையிலும் பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றுதானே கூறுகிறேன். என்னை அழைத்துக் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என சொல்லவில்லை. எனக்கு சிபாரிசு செய்வதாக ராஜன் செல்லப்பா சொல்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து செயல்பட்டால்தான், இனிமேல் எந்த தேர்தல் வந்தாலும் திமுகவை எதிர்க்கும் சக்தியை உருவாக்க முடியும். எனக்கு சிபாரிசு செய்யும் நோக்கத்தில் ராஜன் செல்லப்பா எங்களை அழைத்துக்கொண்டு போய் பேசவேண்டும் என நாங்கள் யாரும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டோம்.

அதிமுக முன்னாள் எம்பி ரவீந்திரநாத் பற்றி தெரியாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகிறார். அவர் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர் வெங்கடேசன் வீட்டில் எனது மகனுக்கு பேரவையில் மாவட்ட பதவி வழங்க கூறியபோது, அவர் எங்கே உட்கார்ந்து இருந்தார் என்பதை சொன்னால் அது அரசியல் அநாகரிகம்.

நான் முதல்வராக இருந்தபோது, இரு மொழிக்கொள்கைதான் எங்களின் கொள்கை என்பதை உறுதியாக சொல்கிறோம் என தெரிவித்தோம். திராவிட இயக்கங்களை பொறுத்தவரையிலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே. தேர்தலுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களை சந்திப்போம். மெகா கூட்டணி அமைத்து, வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி கூறுவது நல்ல நகைச்சுவை. எம்ஜிஆர் மறைந்த பிறகு இரு அணியாக பிரிந்தோம். தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு தொண்டர்கள் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதை பார்த்து தான் தலைவர்களே ஒன்று சேர்ந்தனர்.

அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெற முடியாது என்பது தான் மக்களின் 11 தேர்தல்களின் தீர்ப்பு. தொண்டர்கள், மக்களின் எண்ணமும் அதுதான். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரண்டு முறை அமைச்சர், 7 முறை சட்டமன்ற உறுப்பினர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் மிகுந்த பற்று கொண்டவர். அதிமுகவின் இரண்டு தலைவர்களின் படங்கள் இல்லை என்பதை அவர் பிரதிபலிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.