பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சந்தித்து பேசினர். இதில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களை சந்தித்து பேசினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவது ஆகியவற்றை தடுத்திட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளான தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல், பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய திட்ட செயல்பாட்டிற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையிலும், தமிழக அரசின் நிதியிலிருந்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ஏதுவாக கடலோர மேலாண்மை திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பிரச்சனையில் நிரந்தரத் தீர்வை காண வேண்டுமென்று பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வலியுறுத்தியும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் வந்துள்ளனர்.
ஏற்கனவே தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள், இன்றைய தினம் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடற்பாசி வளர்த்தல், மதிப்புக் கூட்டிய மீன் பொருட்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விரைந்து பரிசீலிக்க துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.