சீமான் மீதான பலாத்கார வழக்கில் எனக்கு நீதி கிடைக்கும்: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாம் தொடர்ந்த பலாத்கார வழக்கில் தமக்கு நீதி கிடைக்கும்; நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று தாம் நம்புவதாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். இந்த புகாரின் அடிப்படையிலான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். சீமான் தாக்கல் செய்த மனுவில், 2011-ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி 2012-ல் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடிதம் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கை ஏற்கனவே முடித்து வைத்துவிட்டனர். ஆனால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பாக அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, சீமான் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜரானார். அவர் தமது வாதத்தில், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி தாம் கொடுத்த புகார்களை திரும்பப் பெற்றுக் கொண்டார். தற்போது தூண்டுதல் பேரில் தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். ஆனால் தமிழக போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இது பாலியல் வன்கொடுமை வழக்கு; இந்த வழக்கு தொடர்பாக நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்கு மூலம் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமிதான் கேட்டுக் கொண்டார். 2008-ம் ஆண்டு முதல் இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது; 2011-ல் இது வெளியானது; ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றார்.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்காக வழக்கை திரும்பப் பெற்றார்? அவரே வழக்கை திரும்பப் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது. நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? இந்த வழக்கை சர்வ சாதாரணமாகவும் முடித்துவிட முடியாது என்று கூறி சீமான் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்தார். மேலும் இவ்வழக்கை 12 வாரங்களில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இது சீமான் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சீமான் மீது நான் கொடுத்த பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றம், இது பாலியல் வழக்கு; ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு என்னுடைய நன்றிகள். நீதிமன்ற விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பு உண்டு. இந்த உத்தரவு வந்த உடன் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், என்னை மனநோயாளி என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

சீமானுக்கு இந்த வழக்கில் யாரும் வக்காலத்து வாங்க முடியாது; அப்படி சீமானை காப்பாற்றியவர்கள் எல்லாம் இன்று நாம் தமிழர் கட்சியை விட்டு ஓடிவிட்டார்கள்; 2008-ம் ஆண்டு முதல் சீமானுடன் நான் வாழ்ந்திருக்கிறேன்; அப்போது எல்லாம் சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் எல்லாம் சீமானுடன் இல்லை. இப்போதைய நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என தெரிவித்துள்ளார்.