டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க>> யார் இந்த ரேகா குப்தா? – மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் வரை!

முதல்வர் ரேகாவுடன், பாஜக எம்எல்ஏக்களான பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் மற்றும் ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

டெல்லி அரசியலில் முக்கியமான ஜாட் சமூக பிரதிநிதியாக பர்வேஷ் வர்மா அறியப்படுகிறார். சமீபத்திய டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்பு, மிகவும் முக்கியமான நபராக மாறினார். முதல்வர் பதவிக்கான போட்டியில் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடந்த 2014 – 2024 வரை பர்வேஷ் மேற்கு டெல்லியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது பேரவைத் தேர்தலில் வென்று டெல்லி கேபினட் அமைச்சராகியுள்ளார்.