காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனைகள் முடிந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. இவருக்கு பெரிதளவில் உடல் நலப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்நிலையில், நேற்று உடல்நலக் குறைவு காரணமாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சில மருத்துவ கவனிப்புகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராகுல் காந்தியின் வருகைக்குப் பின்னர் சோனியா காந்தி பொது வெளியில் அரசியல் நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல் வியூகங்களை வகுக்கும் பணிகளை மட்டும் அவர் மேற்கொண்டு வருகிறார். தவிர தேர்தல் பிரச்சாரங்களிலும், களப் பணிகளிலும் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியை பங்கேற்க வைத்திருக்கிறார். அதே நேரம் கட்சிக்குள் இளம் தலைவர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்.