தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி மொழி எழுத்துகளை தார்பூசி அழித்து இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வை திமுகவினர் வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி மறைமுகமாக திணிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையானது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது என்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பு. இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது தமிழ்நாடு. ஆனால் மத்திய அரசோ, மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி துறைக்கான மத்திய அரசின் நிதியை தர முடியாது என ஆவேசம் காட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்ட குரல் வெடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் உச்சமாக, தமிழ்நாட்டு வரியை மத்திய அரசுக்கு செலுத்தமாட்டோம் என்கிற இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்; இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற குரலும் வலுத்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், வரியை செலுத்தமாட்டோம் என அறிவிப்பதற்கு ஒரு நொடி போதும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த பரபரப்பான, பதற்றமான சூழ்நிலையில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில், பெயர் பலகையில் இருந்த இந்தி மொழி எழுத்துகள் இன்று தார்பூசி அழிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவே இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இதனிடையே பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு வந்த பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள், தார்பூசி அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஞ்சள் பெயிண்ட் பூசி இந்தி எழுத்துகளை எழுதினர். அத்துடன் இந்தி எழுத்துகளை அழித்ததாக திமுகவினர் 5 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாளையங்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் திருநெல்வேலி மாநகர போலீஸார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொடிகளுடன் சென்ற திமுகவினர் சிலர், ரயில் நிலைய நடைமேடையில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து, தமிழ் வாழ்க என்று எழுதினர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழ் வாழ்க என்றும் முழக்கமிட்டனர். காவல்துறையினர் ஓரிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அறிவித்த இடத்துக்கு மாற்றாக திடீரென பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்குச் சென்று, இந்தி எழுத்துகளை அழித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.