டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி தேர்வு!

டெல்லியின் முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். டெல்லி பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி, எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தாவினை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான பெண் முகம் வேண்டும் என்பதால் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், கல்காஜி எம்எல்ஏவான அதிஷி உட்பட கட்சியின் 22 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் தோல்வியடைந்திருந்த நிலையில் அதிஷி எதிர்க்கட்சித் தலைவராக முன்னிருத்தப்பட்டுள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பின்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 43 வயதான அதிஷி டெல்லி முதல்வரானார். அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பல்வேறு பிரச்சினைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொண்டு டெல்லி ஆம் ஆத்மி அரசின் முகமாக அதிஷி மாறியிருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி பேரவைத் தேர்தலில் தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி, 2025 தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியில் பாஜக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதுரியை தோற்றடித்து வாகை சூடியிருந்தார்.

டெல்லியிலுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பின்பு தலைநகரில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2015, 2020 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. தொடர்ந்து மூன்று தேர்தலில்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் முந்தைய ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறன் பற்றிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.