பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் கே.கனகசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடியின் அரசு ஏழை, எளிய மக்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அரசாக உள்ளது. மேட்டுப்பாளையம்-கோவை வரை இரட்டை ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல இடங்களில் சாலை அமைக்க தமிழக அரசு இடம் எடுத்து மத்திய அரசுக்கு வழங்காததால் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை.
தி.மு.க.வில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கி, அங்கு இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிடுமா? தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வருகையால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.