சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை கூறக்கூடாது என்ற முந்தைய நீதிமன்ற வழிக்காட்டுதலை பின்பற்றுமாறு சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கரின் நேர்காணல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 16 முதல் தகவல் அறிக்கைகளுக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை சவுக்கு சங்கர் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அடுத்த விசாரணை வரும் வரை நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் எந்த வீடியோக்களையும் வெளியிடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்காததற்காக நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சவுக்கு சங்கர் மீறி உள்ளதாக குற்றம்சாட்டினார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன், “தாம் கூறிய கருத்துக்கு சவுக்கு சங்கர் நிபதனையற்ற மன்னிப்பு கோரி உள்ளார்” என தெரிவித்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருக்க கூடாது என்று கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ஹோஹத்கி, “நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினர் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து உள்ளார்” என்றும் அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மே 3, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் இந்த விசாரணை தொடரும் என தெரிவித்தனர். குற்ற எண்.10 -ஐ தவிர மற்ற வழக்குகள் மீதான விசாரனை கோவை நகர சைபர் கிரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம்தேதி அன்று ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அளித்த நேர்காணில் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கருக்கு எதிராக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜூலை மாதம் சவுக்கு சங்கரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.