கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 21-ம் தேதி மாநில அரசுப் பேருந்தின் நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரிக்கும் பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கும் இடையே கன்னடத்தில் பேசுவதா? மராத்தியில் பேசுவதா? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் மராத்தியில் பேசுமாறு கூறி, நடத்துநரை தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெலகாவி போலீஸார் 4 பேரை கைது செய்தனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு பெங்களூருவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற மகாராஷ்டிர அரசுப் பேருந்தின் மீது, சித்ரதுர்காவில் க‌ன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ஓட்டுநர் பாஸ்கர் ஜாதவின் முகத்தில் கறுப்பு மை பூசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மகாராஷ்டிர போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து கர்நாடக பேருந்துகள் மகாராஷ்டிராவுக்குள் நுழைந்தால் கற்களை வீசி தாக்குவோம் என அங்குள்ள மராத்திய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு சென்ற கர்நாடக பேருந்துகள் மீது ‘ஜெய் மகாராஷ்டிரா’ என கறுப்பு மையால் எழுதி அனுப்பினர். இதனால் க‌ர்நாடகா, மகாராஷ்டிரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு மாநில பயணிகளும் நேற்று 3-வது நாளாக கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் பேருந்துகள் பெலகாவி மாவட்டம் கோக்னோலி வரை மட்டுமே செல்கின்றன. அதேபோல மகாராஷ்டிர அரசு பேருந்துகளும் எல்லையில் உள்ள‌ கோக்னோலி வரை வருகின்றன. இரு மாநில மக்களும் சுமார் 1.5 கிமீ தூரம் நடந்து சென்று எல்லையை கடக்கின்றனர்.