‘‘காங்கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவையில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்துக்கு சசிதரூர் எம்.பி. திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்போது பாராட்டி வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசியதை பாராட்டியிருந்தார். இதனால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை மிகவும் பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்நிலையில், ‘வர்த்தமனம்’ என்ற தலைப்பில் மலையாள மொழியில் வெளியான பாட்காஸ்ட் வீடியோ நாளை வெளியாக உள்ளது. அதன் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதில் சசிதரூர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் சந்தோஷமாக இருந்தேன், நிறைய சம்பாதித்து வந்தேன். ஆனால், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இங்கு வந்தேன். கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்து வருவதை பாராட்டினேன். மக்கள் என்னுடைய கருத்து சுதந்திரத்தைப் பாராட்டுகிறார்கள். கட்சியில் நான் வேண்டும் என்று நினைத்தால் இருப்பேன். அப்படி இல்லாவிட்டால், எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. எனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. எனக்கு புத்தகங்கள் இருக்கின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றுவேன், உலகளவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு எனக்கு அழைப்புகள் வருகின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், மாநில தேர்தல்களில் அது எதிரொலிக்கவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்குகளே உள்ளன. அதை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. கூடுதலாக 26 – 27 சதவீத வாக்குகள் பெற்றால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். கடந்த 2 மக்களவை தேர்தல்களில் நம்மை ஆதரிக்காதவர்களின் வாக்குகளைப் பெற வேண்டும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.