முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக, இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் கடந்த 14-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் வேலன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. ராஜேந்திர பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி ஆஜராகி, மனுதாரருக்கு எதிரான வழக்கில் புலன்விசாரணை நிறைவுற்று குற்றப்பத்திரிகையும் தயாராக உள்ளது என வாதிட்டப்போது, நீதிபதிகள், இந்த மனுவை தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.