ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பணியாற்றிய காலத்தில் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பணி நியமனம் செய்ய நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. ரயில்வே வேலை பெற்றவர்கள் தங்கள் நிலங்களை லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோதமாக ஆதாயங்களை பெறுவதற்காக போலி நிறுவனங்களை லாலு குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் நடத்தியுள்ளனர்.
லுாலு மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் ஹேமா யாதவ் ஆகியோரும், ரயில்வே வேலை பெற்றவர்களிடம் இருந்து நிலங்களை பெற்று அவற்றை ரூ.3.5 கோடிக்கு விற்றுள்ளனர். இந்தப் பணம் லாலு குடும்பத்தினரின் இதர நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் தொடர்புடைய லுாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜ் பிரதாப் மகள் ஹேமா ஆகியோர் அடுத்த மாதம் 11-ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி விஷால் காக்னே நேற்று உத்தரவிட்டார்.