தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த தாரசுரம் புறவழிச்சாலையில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேறறார்கள். கும்பகோணம் மொத்தமும் கடந்த 23ம் தேதி பாமக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. சென்னை, முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
இந்நிலையில் கும்பகோணம் மாநாட்டில் பங்கேற்க வந்த பாமக தொண்டர்கள் சிலர் மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.